கண்டறியவியலா நிலையில் இருப்பது என்பது ஒரு நபர் எச்.ஐ.வி. உடையவராக இருந்து அதற்கான மருந்துகளை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது எச்.ஐ.வி அவர்களின் உடலில் ஒடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இருப்பது ஆகும். உண்மையில், அது எவ்வளவு ஒடுக்கப்பட்டிருக்கும் என்றால் இரத்த பரிசோதனைகளில் கூட எச்.ஐ.வி இருப்பதைத் துளியும் கண்டறிய முடியாமல் இருக்கும்.
எச்.ஐ.வி யோடு வாழ்கின்ற ஒரு நபர் கண்டறியவியலா நிலையில் இருக்கும்போது அவர் ஆரோக்கியமானவராக மட்டும் அல்லாமல் வேறு எவருக்கும் எச்.ஐ.வி யைப் பரப்பாத நபராகவும் இருக்கிறார் என்பதை அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது. கண்டறியவியலா நிலை என்பது பரப்பவியலா நிலைக்கு சமம். ஆங்கிலத்தில் இதனை Undetectable = Untransmittable (U = U) என்பர்.
ஒரு நபர் அவருக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் காலம் வரையிலும் அவர் கண்டறியவியலா நிலையில் இருப்பது என்பது தொடரும்.
கண்டறியவியலா நிலையில் இருப்பது என்பது ஒரு நபர் எச்.ஐ.வி யிலிருந்து குணப்படுத்தப்பட்டுவிட்டதாகப் பொருள் கொள்ளக்கூடாது. ஆனால் இது ஒரு பயனுள்ள எச்.ஐ. வி தடுப்பு வழி என்று பொருள் கொள்ள வேண்டும்.
எச்.ஐ.வி உடன் வாழும் சிலர் கண்டறியவியலா நிலையில் இருக்கமாட்டார்கள். இவர்கள் ஆணுறை மற்றும் PrEP போன்ற எச்.ஐ.வி தடுப்பு வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பாதுகாப்பான உடலுறவைப் பெற முடியும்.
மேலும் தகவல்களுக்கு TheBody அல்லது www.UequalsU.org ஐப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)